உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலத்தூர் பெருமாள் கோவில் தேரோட்டம்

ஆலத்தூர் பெருமாள் கோவில் தேரோட்டம்

மரக்காணம்: ஆலத்தூர் வேட்டை  வெங்கட்ராய பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் கனகவல்லி தாயார் உடனுறை வேட்டை வெங்கட்ராய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 16ம் ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 11ம் தேதி துவங்கியது. 12ம் தேதி கொடியேற்றப்பட்டது. 13ம் தேதி பெருமாள் சிம்ம வாகனத்திலும், 14ம் தேதி அனுமந்த வாகனம், 15ம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 16ம் தேதி கருட சேவை, 17ம் தேதி புஷ்ப ரதம், 18ம் தேதி யானை வாகனத்திலும் வீதியுலா நடந்தது. 19ம் தேதி காலை 9:00 மணிக்கு வெண்ணைத்தாழி கண்ணன் திருக்கோல உற்சவம், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு, கனகவல்லிதாயார் சமேத  வெங்கட்ராய பெருமாள் தேரில் எழுந்தருள, திரளானபக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். கோவில் பட்டாச்சாரியார் வெங்கட்டா ரமணன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மற்றும் குடும்பத்தினருக்கு பூரண கும்பமரியாதை செய்தார். தேரோட்டத்தை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை அறங்காவல் குழுதலைவர் விஜயலட்சுமி ஜானகிராமன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !