கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்!
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி கம்பம் நடுதல் விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து, 16ம் தேதி பூச்செரிதல், 18ம் தேதி காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும், கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தியும், தீசட்டி ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது. மாரியம்மன் கோவில் அருகில், பா.ஜ., மகளிர் அணி சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை, மாவட்ட தலைவர் சிவசாமி திறந்து வைத்தனர். இன்று இரவு, 7 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மாலை, 5.15 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடக்கிறது. அன்றிரவு அமராவதி ஆற்றில் வாண வேடிக்கை நடக்கிறது. தொடர்ந்து வரும் ஜூன், 5ம் தேதி பஞ்ச பிரகாரமும், 6ம் தேதி புஷ்ப பல்லக்கு, 7ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும், 8ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.