சூரிய பிரபை வாகனத்தில் சுப்ரமணியர் திருவீதி உலா!
குமரகோட்டம்: சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, காலை சூரிய பிரபை வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி திருவீதிவுலா நடந்தது. குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் பவளகால் சப்பரத்தில், சுவாமி வீதிவுலா நடந்தது. மாலை மேஷ வாகனத்தில் வள்ளி, தெய்வானை உடனான சுப்ரமணியர் புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, காலை 8:00 மணிக்கு, சூரிய பிரபை வாகனத்தில் வள்ளி, தெய்வானை உடனான சுப்ரமணியர் வீதிவுலா புறப்பாடு நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
வல்லக்கோட்டை: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டை வள்ளி, தெய்வானை உடனான, சுப்ரமணிய சுவாமி கோவிலின், ஐந்தாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம் நேற்று முன்தினம், கொடி யேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, சுப்ரமணிய சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அதை தொடர்ந்து, இரண்டாம் நாள் உற்சவமான நேற்று, காலை 10:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.