உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் பிரதிஷ்டை விழா: சாளகிராம மாலை அணிவிப்பு!

ராமானுஜர் பிரதிஷ்டை விழா: சாளகிராம மாலை அணிவிப்பு!

ராசிபுரம்: ராசிபுரம் பட்டை பெருமாள் சந்தான கோபாலகிருஷ்ணர் கோவிலில் நடக்கும், ராமானுஜர் பிரதிஷ்டை விழாவில், ஸ்வாமிக்கு நேபாள நாட்டின், சாளகிராம மாலை அணிவிக்கப்படுகிறது. ராசிபுரம்-ஆத்தூர் சாலையில், பட்டை பெருமாள் சந்தான கோபாலகிருஷ்ணர் கோவிலின், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் ராமானுஜர் பிரதிஷ்டை விழா, நாளை (6ம் தேதி) நடக்கிறது. பெரியகடை வீதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவிலில், கோ பூஜை, கணபதி பூஜை, தனலட்சுமி மற்றும் நவகிரஹ ஹோமம் செய்யப்பட்டு, அங்கிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ராமானுஜர் பிரதிஷ்டை விழாவுக்கு, சேலம் அஸ்தம்பட்டி அப்பாதுரை நாயுடு தலைமை வகிக்கிறார். வைணவ புலவர் ராமசாமி, குமுதவல்லி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ பூர்ண ஆச்சாரியார் ஜீயர் சுவாமிகள், மாதவன் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். முத்துகாப்பட்டி ராமானுஜர் கூடத்தின் பக்தசபை பொறுப்பாளர் சீனிவாசன், செல்லம்மாள் தம்பதியினர் ஊர்வலத்தை துவக்கி வைக்கின்றனர். நேபாள நாட்டில் உள்ள முக்தநாத் நாராயண பெருமாள் கோவிலில் உள்ள சாளக்கிராம மாலையை, சந்தான கோபாலகிருஷ்ண ஸ்வாமிக்கு அளிக்கப்படும். வரும், 7ம் தேதி, கலசபூஜை, திருமஞ்சனம், அன்னதானம், யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி ராமானுஜர் ஆலய கும்பாபிஷேகம் நடக்கிறது. சிவகங்கை நாராயணராவ், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை, சேவா அறக்கட்டளை தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் ராஜசேகரன் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !