சென்னிமலை முருகன் கோவில் திருப்பணி வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல திருப்பணிகள் நிறைவு பெற்று, வர்ணம் தீட்டும்பணிகள் சுறுசுறுப்பாக நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய கோவிலான, சென்னிமலை முருகன் கோவில், கந்தசஷ்டி கசவம் அரங்கேற்றமான திருத்தலம். வாரம் தோறும் செவ்வாய் கிழமை இரவு பூஜை பிரசித்தம் பெற்றதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை மீதுள்ள முருகன் கோவிலில், 1.50 கோடியில், ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் பல பணிகள், கடந்த, 2005ல் துவங்கி, ஒன்பது ஆண்டாக நடக்கிறது. ராஜகோபுரத்தில் சுவாமி சிலைகள் வடிவமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதில், 146 உருவங்களை கொண்ட அலங்கார சுவாமி சிலைகள், அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பஞ்சவர்ணம் பூசும்பணிகள் நடக்கிறது. இப்பணி, ஒரு வராத்தில் நிறைவு பெறும்.
கும்பாபிஷேகத்துக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், திருப்பணிகள் இரவு, பகலாக நடக்கிறது. இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கோவில் வளாகத்தில் தங்கி, பணி செய்கின்றனர். மலை மீதுள்ள கோவில் வளாகத்தில், 1.85 கோடி மதிப்பில், புதிய மார்க்கண்டேஸ்வரர் சன்னதி, காசிவிஸ்வநாதர் சன்னதிகள் கட்டப்பட்டு, 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிக்காக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள, ஒரு மலைபகுதியில் இருந்து பெரிய கருங்கற்கள் கொண்டு வரப்பட்டு, முழுவதும் கருங்கற்களால் வடிவமைத்துள்ளனர். இக்கற்களால், ஐந்து நிலை ராஜகோபுரம், மார்க்கண்டேஸ்வரர், காசிவிஸ்வநாதர் மற்றும் கன்னிமூலகணபதி ஆகிய சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இக்கற்கள் மூலமான, புதுமையான வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், சிற்பங்கள் அனைத்து, சோழர் கால முறையில், நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் விமானம் புதுப்பிக்கும் பணி, ஆறு லட்சத்தில் நிறைவு பெற்றுள்ளது. சதவிர, 80 லட்சத்தில், புதிய வடிவில், மதில் சுவர் அமைக்கப்பட்டு, சுவரின் மீது, பிரஸ்தரம் கருங்கற்களிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷோபன மண்டபம் கட்டும் பணி, 29 லட்சம் ரூபாய் செலவில், நன்கொடையாளர்கள் உதவியுடன், மிகவும் நவீன யுக்திகளுடன், பழைய மரபுகள் மாறாத வண்ணம் நடக்கிறது. இப்பணிகள் நிறைவு பெற்று, ஜூலை, ஏழாம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.