உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு ரூ.2.8 கோடியில் தங்கத் தேர்!

திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு ரூ.2.8 கோடியில் தங்கத் தேர்!

காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு 2.8 கோடி ரூபாய் மதிப்பில் தங்கத் தேர் செய்ய பணி நடைபெற்று வருகிறது. திருநள்ளர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி பிரசித்தி பெற்றது.பிரம்மோற்சவ விழாவில் தங்க ரிஷிப வாகனம், தங்க காக்கை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கும்.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளது போல, சனீஸ்வர பகவானுக்கு தங்கத் தேர் செய்ய முடிவு செய்து, அதற்கான பணி துவக்கப் பட்டுள்ளது.இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி கூறுகையில், தமிழகத்தில் பழனி, திருச்செந்துார், வைத்தீஸ்வரன் கோவில், திருவேற்காடு, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் உள்ளது. அதுபோல், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கும் தங்கத் தேர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் இருப்பு தொகை பயன்படுத்தாமல், முழுவதும் பக்தர்களின் நன்கொடை மூலம், தங்கத் தேர் செய்யப்பட உள்ளது. புதிய தங்கத் தேர் 8 கிலோ தங்கம், 450 கிலோ செப்பு தகடு மூலம், 16 அடி உயரத்திலும், 8 அடி அகலத்தில் எண் கோண வடிவில் உருவாக்கப்பட உள்ளது.தேர் செய்வதற்கு 150 கன அடி மரம் பயன்படுத்தப்படும். 2.8 கோடி ரூபாய் மதிப்பில் இந்த தேர் செய்யப்பட உள்ளது. தேர் செய்ய நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள், ’சனீஸ்வர பகவான் கோல்டன் ரதம்’ என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்பலாம் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !