உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி தரிசனத்திற்கும் சொகுசு பேருந்தா?

சுவாமி தரிசனத்திற்கும் சொகுசு பேருந்தா?

சென்னை: சுவாமி தரிசனத்துக்கு செல்லும்போதும், சொகுசு பேருந்தை எதிர்பார்க்கலாமா? என, வழக்கு தொடர்ந்தவரிடம், மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அண்ணா நகரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். அவர், திருப்பதி செல்வதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில், கடந்த 2008, ஜூன் 9ம் தேதி, இரண்டு டிக்கெட்டுகள் பதிவு செய்தார். அதற்காக, 1,770 ரூபாய் செலுத்தினார்.

வசதிகள் எங்கே? : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக, ஏசி பேருந்து, திட்டமிட்டபடி சென்னையில் இருந்து புறப்பட்டு, திருப்பதியை அடைந்தது. சுற்றுலா பேருந்தில் வந்த வழிகாட்டி, திருப்பதியில் இருந்து இயக்கப்படும் பேருந்தில், பயணிகள் மேல் திருப்பதி செல்லுமாறு கூறினார். அதற்கான பேருந்தில் ஏறிய, முத்துகிருஷ்ணனும், அவரின் மனைவியும், இருக்கைகள் வசதியாக இல்லாததால், மாற்று பேருந்து ஏற்பாடு செய்யுமாறு கேட்டனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பேருந்து, மேல் திருப்பதி செல்லாது. திருப்பதியில் இருந்து இயக்கப்படும் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என, வழிகாட்டி கூறினார்.

சேவை குறைபாடு இல்லை? : இதனால், பயணத்தை ரத்து செய்த தம்பதியர், வேறு பேருந்தை பிடித்து சென்னை வந்தனர். உரிய வசதியுடன் பேருந்து இல்லாததால், சுவாமி தரிசனம் செய்யவில்லை. எனவே, இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, சென்னை தெற்கு நீதிமன்றத்தில், முத்துகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். முகாந்திரம் இல்லை என, வழக்கு தள்ளுபடியானது. இதை எதிர்த்து, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில், முத்துகிருஷ்ணன் முறையிட்டார். மனுவுக்கு பதில் அளிக்குமாறு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு, மாநில தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், திருப்பதியில் இருந்து, திருமலைக்கு வேறு பேருந்தில் தான் செல்ல வேண்டும். திருமலை செல்லும் பேருந்தில் உட்கார இடம் இருந்தும், மனுதாரரின் மனைவி, பேருந்து சரியில்லை என்று கூறி, இறங்கி விட்டார். இதில், சேவை குறைபாடு இல்லை என, தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பு என்ன? : இருதரப்பு வாதங்களையும் கேட்ட, மாநில தீர்ப்பாய தலைவர் நீதிபதி ரகுபதி பிறப்பித்த உத்தரவில், நீளம் அதிகம் உள்ள பேருந்துகள், திருமலைக்கு செல்ல முடியாது. தேவஸ்தானம் சார்பில் இயக்கப்படும் பேருந்தில், இருக்கை சரியில்லை என்று கூறி, மனுதாரரே பேருந்தில் இருந்து இறங்கி விட்டார். இதில் சேவை குறைபாடு இல்லை என, தெரிவித்தனர். மேலும், சுவாமி தரிசனத்திற்கும், சொகுசு பேருந்தை எதிர்பார்க்கலாமா? என, மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !