இன்று குருபௌர்ணமி- சிவன் ஆதிகுருவான நாள்!
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி, குருபௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்நாள், நம் மரபில் பன்னெடுங்காலமாய் வாழ்ந்து வரும் ஞானோதயமடைந்த மனிதர்களை கொண்டாடுவதாய் அமைந்துள்ளது. இவர்கள்தம் இருப்பும் அருளும், அவர்களது அறிவும் ‘தன்னை‘ உணர்வதற்கான வழியை நமக்கு காட்டி வந்திருக்கிறது. இவ்வருடம், இந்நாள் ஜூலை 12ம் தேதி வருகிறது. சமஸ்க்ருதத்தில், ‘குரு‘ என்ற வார்த்தைக்கு ‘இருளை அகற்றுபவர்‘ என்று பொருள். ஆன்மிகத் தேடலில் உள்ளவர்களுக்கு, குரு என்பவர் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானோதயப் பாதைக்கு வழிநடத்திச் செல்பவர்.
சத்குரு: ஆதியோகியான சிவன் யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு அளித்து ஆதிகுருவாய் உருவெடுத்த திருநாளே, குரு பௌர்ணமி. மனித உடல் என்பது மண்ணிலிருந்து உருவானதுதான். எனவே, இந்தப் பூமியின் இயல்பு, இந்தப் பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜூன் வரை - தை முதல் ஆனி வரை) உத்தராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜூலை முதல் டிசம்பர் வரை - ஆடி முதல் மார்கழி வரை) அதை தட்சிணாயணம் என்கிறோம். உத்தராயணத்தில் வரும் முதல் பௌர்ணமி (தை மாதம்) “தன்ய பௌர்ணமி”. தட்சிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமி (ஆடி மாதம்) “குரு பௌர்ணமி”. இப்பௌர்ணமி, ஜூலை மாதத்தில் ஏற்படுகிறது. தட்சிணாயன காலமான (ஜூலையிலிருந்து டிசம்பர் வரை) ஆறு மாதங்களின் இயற்கையான குணம், ’உள்வாங்கிக் கொள்ளும்’ தன்மையுடையதாகவும், உத்தராயண காலமான (ஜனவரி முதல் ஜூன் வரை) ஆறு மாதங்கள் இந்தப் பூமி ’நிறைவடையும்’ தன்மையுடையதாகவும் இருக்கிறது.
உத்தராயணத்தில், அதாவது ஜனவரியிலிருந்து ஜூன் வரை இந்தப் பூமி ஆண்தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்கள், ஜூலையிலிருந்து டிசம்பர் வரை அதாவது தட்சிணாயனத்தில் பெண்தன்மை நிரம்பியதாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. அதனால்தான், சிவன் தன் யோக அறிவினை பகிர்ந்து கொள்ள, தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியை தேர்ந்தெடுத்து, குருவாக அமர்ந்தார். அதனாலேயே இந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று வழங்கப்படுகிறது. வருடத்தின் இக்காலகட்டத்தில்தான், ஆதியோகியான அந்த சிவனின் கவனம் தன் ஏழு சீடர்களின் மீது விழுந்தது. சப்தரிஷிகள் என்று பிரபலமாகப் பேசப்படுவது சிவனின் இந்த ஏழு சீடர்கள்தான். யோக பாரம்பரியத்தில், அந்த சிவனை கடவுளாக வணங்குவதில்லை, ஆதியோகியாக, ஆதிகுருவாக பார்க்கிறோம். ஆதியோகியிடமிருந்துதான் யோகா முதன்முதலில் தோன்றியது. துறவியாக, யோகியாக, சுற்றி இருப்பதில் முற்றிலும் ஈடுபாடு அற்றவராக இருந்தவர், ஈடுபாடு கொள்ளத் துவங்கியது இந்த ஜூலை மாதத்தில்தான். அவருக்கு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கம் இந்த மாதத்தில்தான் மெல்ல மலரத் துவங்கியது.
28 நாட்கள், சிவன் தன் கவனத்தை சப்தரிஷிகளிடம் இருந்து விலக்கவில்லை. குரு பௌர்ணமிக்கு முந்தைய பௌர்ணமியிலிருந்து, குரு பௌர்ணமி வரையில் சப்தரிஷிகளுடன் அவர் முழுமையாய் இருந்தார். 84 வருடம் எளிமையான, தயார்நிலை பயிற்சிகளில் சப்தரிஷிகள் ஈடுபட்டிருந்தனர். ஆனால், சிவன் ஒரு கணம்கூட அவர்களை கவனிக்கவில்லை. ஆனால் 84 வருடங்களுக்கு பின், வருடத்தின் இந்தப் பகுதியில்தான் சிவனது கவனம் முழுமையாய் சப்தரிஷிகள் மீது பதிந்தது. எனவே, இந்த மாதம் இருதயமற்ற ஒரு துறவியால் கூட புறக்கணிக்க இயலாத ஒரு மாதமாக ஆனது. இம்மாதத்தில், அவர் மிகுந்த கருணை உடையவர் ஆனார். உலகம் தன்னை தொடாதவாறு தன்னை கடினப்படுத்திக் கொண்ட ஒருவர் தளர்ந்து, கருணை வடிவமானார். நோக்கம் எதுவும் கொள்ளாமல், ஒரு ஆசிரியராக, குருவாக அவர் ஆனார். எனவே, இந்த மாதம் குருவின் அருள் பெற சிறந்த காலமாக உள்ளது. அருளின் கவனம் உங்கள் மேல் விழவும் இது சிறந்த நேரம். ‘வாழ்வின் உண்மையான நோக்கத்தையும் அதன் ஆற்றலையும் நீங்கள் உணர்வீர்களாக. இந்த குரு பௌர்ணமி தினத்தில் என்னுடைய அருள் உங்களுடன் நிறைந்திருக்கும்.‘
அன்பும் அருளும்: குரு என்பவர் சாலை வரைபடம் போல என்கிறார் சத்குரு. குருவின் வழிகாட்டல் இல்லாமலும் ஒருவர் தான் போய் சேர வேண்டிய இலக்கை அடையலாம். ஆனால், அதற்கு நீண்டகாலம் செலவிட நேரிடும். குரு பௌர்ணமி அன்று, ஆன்மிக சாதகர்கள் தத்தம் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்களது அருளைப் பெறுகிறார்கள். குரு பௌர்ணமி அன்று, யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகுந்த பயனடைகின்றனர். ஈஷா யோகா மையத்தில், ஒவ்வொரு வருடமும், குரு பௌர்ணமி விழா கொண்டாடப்படுகிறது.
குரு பௌர்ணமி கொண்டாட்டங்கள்: ஜுலை 12, 2014 - மாலை 6 மணி முதல் இரவு 12.30 மணி வரை சத்குருவுடன் குருபூஜை (21 அடி ஆதியோகி விக்ரஹம்/சிலை/சிற்பம் முன்னிலையில்; சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை அரங்கேற்றம்; லிங்கபைரவி ஊர்வலம்; மஹாஆரத்தி; பிரசாதம் (இரவு உணவு); சத்குருவுடன் சத்சங்கம் இந்தப் புனித நன்னாளில், நம்முடன் வாழும் ஒரு குருவின் அருள்பெற வாருங்கள்.
ஈஷா யோகா மையம்,
வெள்ளியங்கிரி மலைச்சாரல், செம்மேடு அஞ்சல், கோயமுத்தூர் - 641114
தொ.பே. 0422 2515345
இணையதளம்: www.ishafoundation.org; www.AnandaAlai.com
( 12ம் தேதி இரவு 10 மணிமுதல் 12 மணி வரையான குரு பௌர்ணமி நிகழ்வுகள், தினமலர் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்)