திருக்கோவிலூர் தெப்பக்குளம் சீரமைப்பு!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் புராதன நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி துவங்கியது. திருக்கோவிலூரை புராதன நகரமாக தமிழக முதல்வர் ஜெ., கடந்த ஆண்டு அறிவித்தார். நகர மேம்பாட்டு நிதியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பாழடைந்த நிலையில் இருக்கும் தெப்பக்குளத்தை சீரமைக்க 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி டெண்டர் பணிகள் முடிந்தன. நேற்று குளம் சீரமைக்கும் பணி துவங்கியது. ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் குளத்தின் படிகற்களை சீரமைப்பது, ஆழப்படுத்துவது, குளத்தை சுற்றி நடைபாதை ஏற்படுத்துவது, குளத்தின் மையத்தில் மண்டபம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. குளத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏரியில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வரும் பாதாள கால்வாயையும் சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் குளத்தை சீரமைத்ததற்கான பணிகள் நிறைவடையும். மேலும் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தின் நடுவே மண்டபம் அமைப்பது, உள்ளிட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது என்பதால் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி குளத்தை முழுமையாக சீரமைத்து, தண்ணீர் வரும் வழி ஏற்படுத்த வேண்டும்.