உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி பனி மய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம்!

தூத்துக்குடி பனி மய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் திரண்டனர். 430 ஆண்டுகள் பழமை வாய்ந்த பனி மய மாதா கோயிலில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆக., 5 ம் தேதி வரை நடக்கும். தூத்துக்குடியில் உள்ள அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள். வெளி நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கிறிஸ்தவர்கள் கோயில் திருவிழாவிற்காக தூத்துக்குடிக்கு வருகை தருவார்கள். கொடியேற்றம்: நேற்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் மூன்றாம் திருப்பலி நடந்தது.அதன் பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சர்ச்சை சுற்றி வந்தது.திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் பாடல்களுடன், காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஏராளமானோர் சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வானில் புறாக்களை பறக்க விட்டனர். பால் பழம் வழங்கினர்: கொடியேற்றத்தின் போது கிறிஸ்தவர்கள் பானை, குடங்களில் பால்கள், வாழை தார்களை எடுத்து வந்து கொடிமரத்தில் அர்ச்சித்து பெற்றனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கொடியேற்றத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பாலும், பழமும் வழங்கினர். அன்னைக்கு பொன் மகுடம்: கொடியேற்றத்திற்குப்பின் திருப்பலி நடந்தது. பின் பகல் 12 மணிக்கு மாதா அன்னைக்கு பொன் மகுடத்தை மரிய ஜான் கோஸ்தா அணிவித்தார். பொன் நகைகள் அணிவிக்கப்பட்டன. மாலை 5.30 க்கு இளையோருக்கான திருப்பலி நடந்தது. இரவு 7.15 க்கு ஜெபமாலையும், நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தூத்துக்குடி மற்றும் சுற்றிலும் உள்ள பங்கு மக்கள் பங்கேற்றனர். தினமும் காலை 4.30 க்கு முதலாம் ஜெபமாலையும், 5 க்கு முதலாம் திருப்பலி, 5.45 க்கு இரண்டாம் திருப்பலியும், 12 க்கு இரண்டாம் ஜெபமாலையும், 3 க்கு மூன்றாம் ஜெபமாலையும், மறையுரையும் நடக்கவுள்ளது. இரவு 7.15க்கு நான்காம் ஜெபமாலையும், நற்கருணை ஆசீர் வழங்கப்படவுள்ளது. ஆக., 5 ல் மதுரை பிஷப் பீட்டர் பெர்ணான்டோ கலந்து கொள்கிறார். அன்று அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது. ஆக., 6 ம் தேதி காலை 9 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !