உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளியை முன்னிட்டு 350 தீபலட்சுமி விளக்கு பூஜை!

ஆடி வெள்ளியை முன்னிட்டு 350 தீபலட்சுமி விளக்கு பூஜை!

ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை மதுர காளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, 350 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை மற்றும் அபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆத்தூர் நகராட்சி, 1வது வார்டு, கோட்டை சம்போடை வனத்தில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆடி வெள்ளியை முன்னிட்டு, தீபலட்சுமி திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணியளவில், வலம்புரி விநாயகர், பாலசுப்ரமணியருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 11 மணிக்கு, மதுரகாளியம்மன் ஸ்வாமிக்கு, உலக நன்மை, மழை வேண்டியும், பால், பழம், மஞ்சள், தயிர், குங்குமம் அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு, மதுரகாளியம்மன் ஸ்வாமி, வெள்ளி கவசம், புஷ்ப சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12.30 மணிக்கு, 350 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. ஆத்தூர் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு, குங்குமம், மஞ்சள், தாலி கயிறு, ஜாக்கெட் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !