பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்!
பழநி : முருகப்பெருமானின் மூன்றாம்படைவீடான, பழநி திருஆவினன்குடி கோயிலில், ரூ.90 லட்சரூபாய் செலவில் கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. பழநி உபகோயில்களான, பெரியநாயகியம்மன்கோயில், பெரியாவுடையார் கோயில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட இடங்களில், பல லட்ச ரூபாய் செலவில், திருப்பணிகள் நடக்கிறது. திருஆவினன்குடிகோயிலில், சனீஸ்வரர் சன்னதி, மீனாட்சி, சொக்கநாதர் உள்ளிட்ட தனிசன்னதிகளின் கோபுரங்களில் சேதமடைந்துள்ள சுதைகளை புதுப்பித்து, வர்ணம் பூசப்படுகிறது. மயில் மண்டபம் (வெளிப்பிரகாரம்) சுற்றி, சுமார் 16 லட்ச ரூபாய் செலவில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.கோயிலின் மேல்தளத்தில் சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் தட்டோடு பதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டபங்களிலும் உள்ள ஓவியங்கள், சிலைகள் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் புதுபிக்கப்பட்டு வர்ணம் பூசப்படுகிறது. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“திருஆவினன்குடி கோயிலில் 90 சதவீத கும்பாபிஷேக திருப்பணிகள் முடிந்துள்ளது. இறுதியாக ராஜகோபுரத்திற்கு வர்ணம்பூசும் பணிநடக்கிறது. இம்மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். விரைவில் குடமுழுக்குவிழா நடக்கவுள்ளது,” என்றார்.