தூய இதய அன்னை ஆலய தேர் திருவிழா
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், புதிதாக திறக்கப்பட்ட, துாய இதய அன்னை ஆலயத்தின் தேர்த்திருவிழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரத்தில் துாய இதய அன்னை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை செங்கை மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு நற்கருணை விழா அருட்பணி மரியடெல்லஸ் தலைமையில் நடந்தது.நேற்று மாலை 7:00 மணியளவில் கோவிலிலிருந்து அன்னை மரியாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கு தேரில் பவனி வந்தார். திசைஜெரி தலைமையில் இந்த தேர்த்திருவிழா நடந்தது.துாய இதய அன்னை உருவம் தாங்கிய தேர், தாமல்வார் தெருவிலிருந்து பூக்கடை சத்திரம் வழியாக நான்கு ராஜவீதிகளில் இறை வழிபாட்டுடன் சென்றது. இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சென்றனர். இரவு 8:30 மணிக்கு மீண்டும் தேர் ஆலயம் சென்றடைந்தது.வின்சென்ட் சிலுவை அடிமை மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை இறை மக்கள், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.