மாங்கல்ய பாக்கியத்திற்கு நெல்லி இலை அர்ச்சனை!
மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டி, சில மகரிஷிகள் இங்குள்ள மலையடிவாரத்தில் யாகம் நடத்தினர். அசுரன் ஒருவன் யாகம் நடக்க விடாமல் தொந்தரவு செய்தான். யாகம் தடையின்றி நடக்க அருளும்படி ரிஷிகள் திருமாலை வேண்டினர். மகாவிஷ்ணுவும் அசுரனை அழித்தார். அந்த கோபத்துடன் சுவாமி உக்கிரமாக இருக்கவே, ரிஷிகள் மகாலட்சுமியை வேண்டினர். அவள் தன் கணவரை சாந்தப்படுத்தினாள். அதே இடத்தில், தாயார்களுடன் சுவாமி கல்யாண கோலத்தில்எழுந்தருளினார். அவருக்கு சீனிவாசர் என திருநாமம் சூட்டப்பட்டது.
நெல்லி மர விசேஷம்: திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. பத்ம விமானத்தின் கீழ் அருளும் சுவாமி, வலது கையால் ஆகாயத்தையும், இடது கையால் பூமியையும் காட்டியபடி சர்வலோகமும் தனக்கே சொந்தம் என்று உணர்த்துகிறார். நெல்லிமரம் இத்தலத்தின் விருட்சம். மாங்கல்யம் மற்றும் பிதுர்தோஷ நிவர்த்திக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்கின்றனர். நெல்லி மரம் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், பெருமாளிடம் லட்சுமி சிபாரிசு செய்து, நமது குறைகளைத் தீர்த்து வைப்பாள் என்பது நம்பிக்கை. திருமணத்தடை நீங்க கல்யாண சீனிவாசருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர்.