திருப்பதி செல்லும் பக்தர்கள் நிம்மதி!
திருப்பூர் : அக்., முதல், கோவை-திருப்பதி ரயில், திருப்பூரில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு, பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரி வந்தனர். இதை ஏற்ற ரயில்வே நிர்வாகம், 2011 செப்., மாதம் கோவை-திருப்பதி (22616) இடையே அதிவிரைவுரயில் இயக்கியது. செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் இந்த ரயில், கோவையில் காலை 7:30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, சித்தூரில் நின்று, மறுநாள் பகல் 1:30க்கு திருப்பதியை அடையும்.மறுமார்க்கத்தில் திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை மதியம் 2:30க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, இரவு 9:30க்கு, ரயில் கோவையை அடையும். இந்த ரயிலால், மேற்கு மண்டல பயணிகள் பயனடைந்து வந்தனர். கடந்த ஜூலை மாதம், கோவை-திருப்பதி ரயிலுக்கான அக்., மாத முன்பதிவு நிறுத்தப்பட்டது. இனி, இந்த ரயில் திருப்பூர், ஈரோட்டில் நிற்காது. கோவையில் புறப்பட்டு சேலம், காட்பாடியில் நின்று, திருப்பதியை அடையும் என ரயில்வே அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.இது, திருப்பதி செல்லும் திருப்பூர், ஈரோடு பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. வழக்கம்போல் திருப்பூர், ஈரோட்டில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"மறு அறிவிப்பு வரும்வரை, கோவை-திருப்பதி ரயில் வழக்கமான ஸ்டேஷன்களில் நிறுத்தப்படும்; டிக்கெட் புக்கிங்கும் நடக்கும், என தெரிவிக்கப்பட்டது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பால், திருப்பதி செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோட்டில் திருப்பதி ரயில் நிற்கும் என்ற அறிவிப்பை, இரு மாவட்ட பயணிகளும் வரவேற்றுள்ளனர்.