பத்திரகாளியம்மன் கோவில் புதியதேர்: தை மாதம் வெள்ளோட்டம்
அந்தியூர்: அந்தியூர் பத்திரகாளியம்மன் கோவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் மிகவும் புகழ் பெற்ற, பாரம்பரியம் மிக்க கோவிலாகும். ஆண்டு தோறும், பங்குனி மாதம் தீ மிதி திருவிழாவுடன், தேரோட்டமும் வெகு விமரிசையாக நடக்கும். தேர் மிகவும் பழுதடைந்து சக்கரங்கள் மற்றும் தேரில் உள்ள சிற்பங்களும் உடைந்து விட்டதால், கடந்த, மூன்று ஆண்டுகள் தோரோட்டம் இல்லாமல், தீ மிதி திருவிழா மட்டும் நடந்து வருகிறது. எனவே, புதிய தேர் செய்ய வேண்டி பொதுமக்கள், கோவில் நிர்வாகம் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அறநிலையத்துறை ஆணையர் பொது நிதியில் இருந்து, பத்து லட்சமும், பழனி பாலதண்டாயுதபானி கோவில் நிதியில் இருந்து, 18.5 லட்சம் ரூபாயும் நிதியாக, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிதி மூலம், கடந்த, 2012ல் புதிய தேர் செய்யும் பணிகள் துவங்கப்பட்டது. புதிதாக தேர் மற்றும் சிற்பங்கள் செய்ய, கேரள மாநிலத்தில் இருந்து, வேங்கை மற்றும் இலுப்பை மரங்கள் வாங்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து, பத்துக்கும் மேற்பட்ட தேர் சிற்ப வடிவமைப்பு கலைஞர்களை கொண்டு, தேருக்கு, ஐந்து நிலை மாடங்கள் அமைக்கப்பட்டு, ஆய கலைகள் அறுபத்தி நான்குடன், 301 சிற்பங்கள் செதுக்கப்பட்டு, புதிய தேர் பணிகள் முடிவடைந்து, தற்போது கம்பீரமான நிலையில் உள்ளது. இன்னும் வர்ணம் பூசுதல் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடக்க உள்ளது. இதற்கிடையில், தேருக்கு அச்சாணி மற்றும் சக்கரம் தயாரிக்க, திருச்சி பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஐந்து டன் (4,880 கிலோ) எடை கொண்ட அச்சாணி மற்றும் ராட்சஷ சக்கரங்கள் செய்யப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தேருக்கு பொருத்த தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், “புதிய தேர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, தேருக்கான அச்சாணியும், சக்கரங்களும் பெருத்தும் பணி, இம்மாதம் துவங்க உள்ளது. வேலைகள் முடிவடைந்ததும், தை மாதத்தில், வெள்ளோட்டம் விடப்படும்,” என்றார்.