உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை நாளை மாலை திறப்பு!

சபரிமலை நடை நாளை மாலை திறப்பு!

நாகர்கோவில்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. நாளை மறுநாள் காலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.நாளை மாலை 5.30-க்கு மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை மறுநாள் காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிஹோமமும், அதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளும் நடைபெறும்.

மேல்சாந்தி தேர்வு : காலை 7.30-க்கு உஷபூஜை முடிந்ததும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற பட்டியலில் இருந்து ஒருவர் ஐயப்பன் சன்னதியில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார். இதுபோல் மாளிகைப்புறம் கோயிலிலும் ஒருவர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார். இந்த ஆண்டு சபரிமலைக்கு 9 பேரும், மாளிகைப்புறத்துக்கு 5 பேரும் தேர்வாகியுள்ளனர். அவர்கள் விபரம்:

சபரிமலை: இ.என். கிருஷ்ணன் நம்பூதிரி, திருச்சூர், எம்.பி. கிருஷ்ணன்நம்பூதிரி, திருவனந்தபுரம், டி.கே. ஸ்ரீதரன்நம்பூதிரி, திருவல்லா, பி.இ. மனோஜ், கோழிக்கோடு, எஸ். கேசவன்நம்பூதிரி, மாவேலிக்கரை, டி.எம். முரளிதரன், பாலக்காடு, கே. நாராயணன்நம்பூதிரி, தொடுபுழா, எம்.பி.அஜய்கிருஷ்ணன், ஆலப்புழா, வி.என். மகேஷ், மூவாற்றுப்புழா.

மாளிகைப்புறம்: என்.கே. ராமன்நம்பூதிரி, சாலக்குடி, பி.இ. மனோஜ், கோழிக்கோடு, எஸ். கேசவன் நம்பூதிரி, மாவேலிக்கரை, வி.என். மேகஷ்,எர்ணாகுளம், எம்.பி. அஜய்கிருஷ்ணன், ஆலப்புழா. வழக்கமாக எல்லா தமிழ்மாதமும் ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும். ஆனால் இந்த மாதம் ஆறு நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாளின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 23-ம் தேதியும் நடை திறந்திருக்கும். 18 முதல் 22 வரை தினமும் சகஸ்ரகலச பூஜைகளும், உதயாஸ்தமன பூஜையும் இரவு ஏழு மணிக்கு படிபூஜையும் நடைபெறும். 23-ம் தேதி திருவிதாங்கூர் அரண்மனை சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைக்காக நவ.,16-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !