ஹாசனாம்பா தேவி கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்!
பெங்களூரு : ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஹாசனாம்பா தேவி கோவிலில், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது குடும்பத்தினர், சாமி தரிசனம் செய்தனர். ஹாசனாம்பா தேவிக்கு சிறப்பு பூஜை செய்த பின், முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, அவரது மனைவி பவானி, மகன் பிரஜ்வல் ஆகியோர், ஸ்ரீசித்தேஸ்வரா கோவிலுக்கு சென்று, சிறிது நேரம் பிரார்த்தனை செய்தனர். ஹாசனாம்பாவுக்கு பூஜை செய்த பின், நிருபர்களிடம் தேவகவுடா கூறியதாவது: ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், இக்கோவிலுக்கு வந்து, பூஜை செய்து வழிபடுகின்றனர். இந்த தாய், சக்தி மிக்கவள். இக்கோவிலுக்கு வரலாற்று புகழ் உள்ளது. ஹாசனாம்பாவுக்கு சக்தி இருப்பதன் காரணமாகவே, பல ஆண்டுகளாக, இங்கு விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. கோவிலில் வாடாத மலர்களை காணலாம். அனைத்து மக்களுக்கும், அன்னை, அருளை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.