பூம்புகாரில் பஞ்சலோக முருகன் சிலைகள் கண்காட்சி!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பஞ்சலோக முருகன் சிலைகள், சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. அக்டோபர், 31ம் தேதி வரை நடக்கிறது.தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில், பண்டிகை நாட்களில் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஸ்வாமி சிலைகள், விளக்குகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைப்பது வழக்கம்.கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, முதல் முறையாக ஸ்வாமிமலை, மகாபலிபுரம், கல்லக்குறிச்சி பகுதிகளில் கைத்தொழில் மூலம் உருவாக்கப்பட்ட முருகன் சிலைகள், சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது.கண்காட்சியில், பஞ்சலோக முருகன், வள்ளி, தெய்வானை, ஆறுமுகப் பெருமான், பாலமுருகன் சிலைகள், பித்தளையிலான முருகன் சிலைகள், வெண்மரம் மற்றும் நூக்க மரத்தில் தயார் செய்யப்பட்ட முருகன் சிலைகள், கல் சிலைகள், தஞ்சாவூர் ஓவியத்தால் தீட்டப்பட்ட விதவிதமான முருகன் சிலைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.தரம் மற்றும் எடைக்கு ஏற்றவாறு சிலைகளுக்கு, இரண்டாயிரத்து, 500 ரூபாய் முதல், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கந்தசஷ்டி விழா விற்பனை இலக்காக, இரண்டு லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என பூம்புகார் மேலாளர் கணேசன் தெரிவித்தார்.