கசவனம்பட்டி கோயிலில் இன்று தீர்த்தாபிஷேகம்; நாளை குருபூஜை
கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை விழா, இன்று தீர்த்தாபிஷேகத்துடன் துவங்குகிறது. கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மூல நட்சத்திரத்தில், குரு பூஜை விழா நடக்கும். காசி, பிரம்மபுத்திரா, அமர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சாதுக்கள், குருபூஜை விழாவில் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டிற்கான குருபூஜை, இன்று தீர்த்தாபிஷேகத்துடன் துவங்குகிறது.இதற்காக மாலையணிந்த பக்தர்கள், சிவனூரணி, திருமலைக்கேணி, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சதுரகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து புனிதநீர் எடுத்து வந்துள்ளனர். தீர்த்தக்குடங்கள் அழைக்கப்பட்டு, மாலை 3 மணி முதல் தொடர்ந்து தீர்த்தாபிஷேகம் நடைபெறும். மாலையில் ஆன்மிகச்சொற்பொழிவுடன் கரூர் பக்தர்கள் குழுவின் பஜனை நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை குருபூஜை நடக்கிறது. காலை 5 மணிக்கு மகா யாகமும், 6 மணிக்கு மூல நட்சத்திர திருவாசக குழுவினரின் திருவாசக பாராயணமும் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாக தீர்த்தாபிஷேகம், 108 படி பாலாபிஷேகம் நடக்கிறது. சோடஷ அபிஷேகத்துடன் குருபூஜையும், மகேஸ்வர பூஜை, சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கலும் நடக்க உள்ளது.காலை 8 மணிமுதல் தொடர் அன்னதானம், தேவார, திருவாசக பாராயணங்கள் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.