உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்!

சேலம் முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்!

சேலம் : கந்தசஷ்டியை ஒட்டி, நேற்று, சேலம் முருகன் கோவில்களில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சேலம், முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா, அக்.,24ம் தேதி துவங்கி நடந்து வந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சேலம், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, பகல், 12 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

* சேலம், ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில், நேற்று காலை, அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாணத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு, முருகன் சமேத வள்ளி, தெய்வானையை வழிபட்டனர்.
* சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், நேற்று காலை, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண கோலத்தில், சுப்பிரமணியர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், ஐயப்பன் பஜனை மண்டலியில், நேற்று காலை, பாலசுப்பிரமணிய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
* சேலம், சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை முருகன் கோவிலில், திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பாலசுப்பிரமணியருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்ப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண கோலத்தில், பாலசுப்பிரமணியர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* சேலம், உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை, திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுப்ரபாதம், கோ பூஜை, குரு வந்தனம், குரு பூஜை, அபிஷேக ஆராதனையும், மாலையில் திருக்கல்யாண சிறப்பு பூஜைகள் நடந்தது.
* சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், முருகன், சமேத வள்ளி, தெய்வானை திருக்கல்யாண கோலத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வழிபட்டுச் சென்றனர்.ஃபேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், செவ்வாய்ப்பேட்டை சித்திரைசாவடி முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் கோவில்களில், நேற்று நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜைகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !