அய்யப்ப பக்தர்களுக்கு 24 மணி நேர உதவி மையம்!
தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, சென்னையில், 24 மணி நேர தொலைபேசி சேவை மையத்தை, அறநிலையத் துறை துவங்கி உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலைக்கு, தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் செல்வது வழக்கம்.
சிறப்பு ஏற்பாடு: இவர்களின் வசதிக்காக, அறநிலையத் துறை இந்த ஆண்டு சில சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இது தொடர்பாக, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், எந்த மாவட்டத்தில் இருந்து எந்த வழியாக செல்லலாம், நடைபயணமாக செல்வோர், எந்த வழியில் செல்ல வேண்டும் என்பது போன்ற விவரங்களை அளிக்க, பிரத்யேக சேவை மையம் துவங்கப்பட்டு உள்ளது.
சென்னையில்...: சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், துவங்கப்பட்டுள்ள இம்மையம், ஜன., 16ம் தேதி வரை செயல்படும். சபரிமலை செல்லும் பக்தர்கள், இந்த மையத்தை தொடர்பு கொள்வதற்காக, ஏற்பாடு செய்ப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 4251 226. அய்யப்ப பக்தர்கள், 24 மணி நேரமும் இந்த மையத்தை தொடர்பு கொண்டு, தேவையான விவரங்களையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம்.
கவனிக்க...: தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கவனத்துக்காக, அறநிலையத் துறை கூறியுள்ள அறிவுரைகள்:
* சபரிமலைக்கு செல்லும் வாகனங்களில், அதிக சுமை ஏற்றக்கூடாது; ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.
* ஒவ்வொரு வாகனத்திலும், முதலுதவி பெட்டி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு பேருந்திலும், இரண்டு ஓட்டுனர் இருக்க வேண்டும்; மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.
* பக்தர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
* ஒவ்வொரு வாகனத்திலும், அதில் செல்லும் அனைத்து பக்தர்கள் பெயர், முகவரி அடங்கிய பட்டியல், ஓட்டுனரிடம் கொடுக்கப்பட வேண்டும்.
* லாரிகள், டிரக்குகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களை, பயன்படுத்தக் கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் காஸ் சிலிண்டர்களை எடுத்துச் செல்லக் கூடாது.