திருமலையில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வஸ்திரம் வருகை!
திருச்சி : திருவரங்கத்துக்கும், திருவேங்கடத்துக்கும் உள்ள தொடர்பு பாரம்பரியம் மிக்கது. இந்த இரண்டு திவ்ய தேசங்களுக்கும், ராமானுஜர் ஏராளமான கைங்கர்யங்களை செய்துள்ளார். ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் உள்ள ஜீயர் மடத்தில், ராமானுஜர் அதிக நாட்கள் தங்கியிருந்து, பெருமாள் கைங்கர்யம் செய்து வந்தார். தற்போது, 50வது பட்டமாக, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் சுவாமிகள் இருந்து வருகிறார். திருமலைக்கும், திருவரங்கத்திற்கும் நீண்ட காலமாக மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை இருந்து வருகிறது. ராமானுஜருக்கும், அவரது பட்டத்தை அலங்கரிக்கும், ஸ்ரீரங்கம் கோவில் ஜீயருக்கும், திருப்பதி மற்றும் திருமலை கோவில்களில் வழங்கப்பட்டு வந்த மங்களா சாசனம் என்ற சிறப்பு வழிபாட்டு உரிமை, நீண்ட காலத்துக்கு பின், மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் சுவாமிகள், திருப்பதி மற்றும் திருமலைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை மங்களா சாசனத்துக்குச் சென்று வருகிறார். திருப்பதியில் இருந்து, புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்படும். கார்த்திகை மாதம் நடக்கும் கைசிக ஏகாதசி விழாவில் ரங்கநாதருக்கும், நம்பெருமாளுக்கும், தாயாருக்கும், உடையவருக்கும், இவை காணிக்கையாக சமர்ப்பிக்கப்படுகின்றன.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நேற்று, கைசிக ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. அதற்காக, திருமலை கோவிலில் இருந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் ராமாராவ், மற்றும் தேவஸ்தான பணியாளர்கள், அரச்சகர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விலாச மண்டபத்துக்கு வஸ்திரத்தை கொண்டு வந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக, யானை மீது வைத்து ரங்கா ரங்கா கோபுரம் வழியாக வஸ்திரம் எடுத்துச்செல்லப்பட்டு, இணை ஆணையர் ஜெயராமனிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் அர்கர்கள், ஸ்தலத்தார், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திருப்பதி வஸ்திர மரியாதைகளுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.