பக்தர்கள் வசதிக்காக.. பம்பை-பழநி, தென்காசி பஸ்சர்வீஸ் தொடக்கம்!
சபரிமலை: பம்பையில் இருந்து பழநி மற்றும் தென்காசிக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பஸ் சர்வீஸ் தொடங்கியது. கேரள அரசு போக்குவரத்து கழகம் தமிழக பக்தர்கள் வசதிக்காக இன்டர்ஸ்டேட் சர்வீஸ்களை தொடங்கியது. இதன்படி பழநிக்கு 2 சர்வீஸ்களும், தென்காசிக்கு 4 சர்வீஸ்களும் இயக்கப்படுகின்றன. பம்பையில் இருந்து குமுளி, கம்பம், தேனி வழியாக பழநிக்கு காலை 8 மற்றும் 9 மணிக்கு பஸ்கள் புறப்படும். மறுமார்க்கத்தில் இரவு 8 மற்றும் 9 மணிக்கு பழநியில் இருந்து பம்பைக்கு இந்த பஸ் புறப்படும். எனினும் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து நேரத்தில் மாற்றம் செய்யப்படும். பழநிபம்பை கட்டணம் 226 ரூபாய். பம்பையில் இருந்து புனலூர், செங்கோட்டை வழியாக தென்காசிக்கு 4 சர்வீஸ்கள் இயக்கப்படுகிறது. காலை 7 மணியில் இருந்து இந்த பஸ்கள் பக்தர்கள் கூட்டத்தைப் பொறுத்து இயக்கப்படும். இதில் கட்டணம் 140 ரூபாய். இதுபோல தென்காசியிலிருந்து மாலை 6 மணியிலிருந்து பஸ்கள் இயக்கப்படும். கோவை மற்றும் கன்னியாகுமரிக்கு பெர்மிட் கிடைத்ததும் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சென்னை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து மதுரை, குமுளி வழியாக பம்பைக்கு பஸ்களை இயக்கி வருகிறது.