உள்ளூர் செய்திகள்

சபரிபீடம்!

நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில்தான் சபரிமலை என்று பெயர் தோன்றக்  காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரான் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம். அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். இந்த ரிஷிகளுக் கெல்லாம் மேலாக, ராமர் மீது பக்தி கொண்டவள் சபரி அன்னை. அதை வார்த்தைகளால் வடிக்க இயலாது.ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக வணங்கினாள். எச்சில் பழமெனக் கருதாத ராமனும், சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே அவள் தங்கியிருந்த மலைக்கு நிலைத்து விட்டது. அதனால் தான் இந்த மலையை சபரிமலை என்கிறோம்.சபரி என்ற சொல்லுக்கு பூஜை என்று பொருள்.ராமனையே மனதில் வைத்து பூஜித்தவள் என்பதால் அவளுக்கு இப்பெயர் வந்தது. இவள் பம்பை நதி கரையில் தங்கியிருந்த மதங்க மகரிஷியின் சிஷ்யை என்றும் சொல்வது உண்டு. சபரிபீடத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து கோயில் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !