உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் குள பராமரிப்பில் கவனமின்மை செயல் அலுவலர்கள் மீது நடவடிக்கை!

கோவில் குள பராமரிப்பில் கவனமின்மை செயல் அலுவலர்கள் மீது நடவடிக்கை!

கோவில் குளங்கள், சரிவர பராமரிக்கப்படவில்லை என, சமீபத்தில், தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சில செயல் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை, இந்து அறநிலைய துறை எடுத்து உள்ளது. சமீபத்தில், தினமலர் நாளிதழில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோவில் குளங்களை சரியாக பராமரிக்கவில்லை என, படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கோவில் குளங்களை, துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், போதிய பராமரிப்பில்லாத கோவில் நிர்வாக அதிகாரிகளான, செயல் அலுவலர்களுக்கு துறை ரீதியான தண்டனைகளை வழங்கினர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், பத்திரிகைகளில் செய்தி வந்ததும், சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் மீது உடனே நடவடிக்கை பாய்கிறது. குளம் தொடர்பாக, தினமலர் நாளிதழில் வெளியான செய்தியில் இரண்டு செயல் அலுவலர்கள் மீது அதிகபட்ச தண்டனையும், மற்றவர்கள் மீது குறைந்தபட்ச தண்டனையும் துறை ரீதியாக தரப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க விஷயம்.திறம்பட செயலாற்றும் எங்களை போன்ற செயல் அலுவலருக்கு, ஒரு வாய்மொழி பாராட்டு கூட கிடைப்பதில்லை. துறையின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையால், செயல் அலுவலர்கள் முழுவீச்சில் பணியாற்ற முடியாமல் போகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !