சிதம்பரம் நடராஜருக்கு புதிய தேர்: வரும் 25ம் தேதி வெள்ளோட்டம்!
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் சுவாமிக்கு ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக செய்யப்பட்ட தேர் வரும் 25ம் தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்கள் நூற்றாண்டைக் கடந்ததால் சேதமடைந்தது. இதனால் கடந்த ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது தேர் எங்கும் நிற்காமல் தொடர்ந்து வலம் வந்து நின்றது.இந்நிலையில் தேரை நிர்வகிக்கும் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் நடராஜர் சுவாமி மற்றும் சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக இரண்டு தேர்கள் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன் புதிய தேர்கள் செய்யும் பணி துவங்கியது. கடந்த ஆனி திருமஞ்சன தேர் திருவிழாவின் போது புதியதாக செய்யப்பட்ட சிவகாமி அம்பாள் தேர் மட்டும் வெள்ளோட்டம் விடப்பட்டது. நடராஜர் சுவாமிக்கு ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 அடி உயரம், 12 அடி அகலம் அளவில் புதிய தேர் பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் நிலையில் உள்ளது.இதற்கிடையே பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், பிரதாப்குமார் ஆகியோர் தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து வரும் 25ம் தேதி நடராஜர் சுவாமி புதிய தேர் வெள்ளோட்டம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.