பாரியூர் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் நாளை துவக்கம்!
கோபி : பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா துவக்கமாக, பூச்சாட்டுதலும், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டமும், நாளை (25ம் தேதி) கோலாகலமாக நடக்கிறது. கோபி அருகே, பிரசித்தி பெற்ற கோவிலாக, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் நாளை (25ம் தேதி) துவங்கி, 15 நாட்கள் நடக்கிறது. குண்டம் இறங்கும் பக்தர்கள், பூச்சாட்டு துவங்கிய முதல் விரதம் கடைபிடிப்பர். பூச்சாட்டு விழாவில் இருந்து, 12ம் நாளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கும்.ஜன., 2ல் திருத்தேர் வெள்ளோட்டம், 5ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம், 7ல் மாவிளக்கு, காப்பு கட்டுதல், பூதவாகன காட்சி நடக்கிறது. ஜன., 8ம் தேதி அதிகாலை திருக்குண்டம் இறங்குதல் மற்றும் சிம்ம வாகன காட்சி, 9ம் தேதி மாலை, 4 மணிக்கு திருத்தேர் நடக்கிறது.
ஜன., 10ம் தேதி மாலை, 4 மணிக்கு முதல் இரவு வரை, மலர்ப்பல்லக்கு தேர்நிலை பெறுதல், 11ல் கோபியில் தெப்போற்சவம், 12 மற்றும், 13ம் தேதி, கோபியில் மஞ்சள் நீர் உற்சவம், 14, 15ம் தேதி புதுப்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம், 16, 17ம் தேதி நஞ்சகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம், 17ம் தேதி இரவு அம்மன் கோவில் வந்தடைதலுடன், மறு பூஜை நடக்கிறது.குண்டத்துக்கு முதள் நாள் இரவே, பூமிதிக்கும் இடத்தில் ‘கரும்பு’ எனும் ஊஞ்சமரக்கட்டைகளை அடுக்கி, கற்பூரம் ஏற்றி, நெருப்பு மூட்டுவர். இதற்காக உபயதாரர் மூலம் ஐந்து டன் விறகு கட்டைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அம்மன் சன்னதிக்கு எதிரே, 60 அடி நீளத்தில், பக்தர்கள் பூமிதிக்க வசதியாக, குண்டம் அமைக்கப்படும். இவ்விழாவுக்காக, கோவில் மைதானத்தில், 13 நாட்கள் தற்காலிக கடைகள் நடத்தி, சுங்கம் வசூலிக்க, 33.33 லட்சத்தில், கோபி புதுப்பாளையத்தை சேர்ந்த, தண்டபாணி என்பவர் உரிமம் எடுத்துள்ளார். பூச்சாட்டு துவங்கும் நிலையில், கோவில் முன்பு தற்காலிக கடைகள் அமைக்க, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.இதேபோல் குண்டமிறங்கும் பக்தர்கள் வசதிக்காக, அமரபணீஸ்வரர் கோவில் தென்னை தோப்பில் இருந்து, பூமிதிக்கும் இடம் வரை, இருபாலரும் தனித்தனியாக வரிசையில் செல்ல தடுப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.பாரியூர் குண்டம் தேர்த்திருவிழா துவங்கும், 25ம் தேதி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், காலை, 7.40 மணிக்கு குண்டம் பூ இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடக்க உள்ளது.