காஞ்சிபுரத்தில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் பரவசம்
காஞ்சிபுரம்: மார்கழி திருவாதிரையை ஒட்டி, நேற்று காஞ்சிபுரத்தில் சைவ கோவில்களில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ராஜ வீதி உலா நடந்தது. மார்கழி திருவாதிரை தினமான நேற்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை, நடராஜருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், ஏகாம்பரநாதர், முத்தீஸ்வரர், சித்தீஸ்வரர், கைலாசநாதர், ஆலடி பிள்ளையார் கோவில் தெரு பணாமுடீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. மார்கழி திருவாதிரையை ஒட்டி, குமரகோட்டம் முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, ராஜ வீதிகளில் வலம் வந்தனர். அப்போது, ஏராளமான பக்தர்கள், சுவாமிகளை வழிபட்டு, தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.