மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா!
அவிநாசி: முருகம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அவிநாசி அருகே உள்ள கணியாம்பூண்டி ஊராட்சி, முருகம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில், மார்கழி மாதம் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறும்.
இந்தாண்டு விழா, கடந்த 6ல் பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, கிராம சாந்தியுடன் துவங்கியது. கிழக்கு விநாயகர் கோவிலில் கும்பம் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோவில் வரை சென்றது. அதன்பின், மாகாளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. விழாவில், மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை செய்யப்படுகிறது. நேர்ந்து கொண்ட பக்தர்கள் , கையில் வேல் எடுத்து, பிரகாரத்தில் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். நேற்று அதிகாலை 4.00 மணி முதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், மெரமனை எடுத்தல் ஆகியன நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, இன்னிசை ஆகியன நடைபெற்றன. முருகம்பாளையம், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, திருப்பூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் 12.30 மணியக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சரவண பவன், ஸ்ரீமாகாளியம்மன் சேவா அறக்கட்டளை திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.