இன்று தைப்பூசம்-ஆறாம் நாள்!
அழகை விரும்பாதவர்கள் யார்? அதனால் தான் அழகு என்ற சொல்லையே முருகனுக்கு பெயராகச் சூட்டினார்கள். முருகு என்றால் அழகு. பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழகாக இருக்கிறது.
அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலுங்கும் மலர்களும் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன. இந்த அழகையெல்லாம் ஒரு சேர பார்த்தால்...ஆகா...கண்ணுக்கு பெரும் விருந்தாக அமையுமல்லவா!
அப்படிப்பட்ட திரண்ட அழகுள்ளவன் முருகப் பெருமான் அழகர்களிலேயே பேரழகன் மன்மதன் என்பார்கள். அந்த மன்மதனைப் போல ஆயிரம் மடங்கு அழகு கொண்டவன் குமாரன். முருகனின் அழகு முன்பு மன்மதனின் அழகு சாதாரணமாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு குமாரன் என்ற பெயர் உண்டானது. கு என்பது அதிகப்படியான என்றும், மாரன் என்றால் மன்மதன் என்றும் பொருள். மன்மதன் கருமை நிறம் கொண்டவன். அவனை கருவேள் என்பர்.
குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி
மன்மதர்களின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.
இந்த பேரழகனுக்கு பேரழகிகளான வள்ளி, தெய்வானை துணைவியராக அமைந்தனர். இவர்களது திருக்கல்யாணத்தை இன்று இரவு 7.30 மணிக்கு தரிசிக்கலாம். பிறகு வெள்ளி ரதத்தில் மணமக்கள் பவனி வருவார்கள். அழகன் முருகனிடம் ஆசை வைக்க புறப்படுவோமா!