காரமடை அரங்கநாதர் தேர்த்திருவிழா 26ல் துவக்கம்
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா வரும், 26ம் தேதி துவங்குகிறது. மார்ச் 3ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில், காரமடை அரங்கநாதர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு தேர்த்திருவிழா வரும், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று இரவு அன்னவாகனம், 27ம் தேதி சிம்ம வாகனம், 28ல் அனுமந்த வாகன உற்சவம் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி கருடசேவையும், 2ல் பெட்டத்தம்மன் அழைப்பும், 3ல் திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகன உற்சவமும் நடக்கிறது. 4ம் தேதி மாலை, 3:15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி வெள்ளைக் குதிரையில் பரிவேட்டையும், 6ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்பத்திருவிழாவும், 7ம் தேதி சந்தான சேவை சாற்றுமுறை உற்சவம் பூர்த்தியும், 8ம் தேதி வசந்தத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
ஆலோசனைக் கூட்டம்: தேர்த்திருவிழா குறித்து அரங்கநாதர் கோவிலில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கோவை ஆர்.டி.ஓ., மதுராந்தகி தலைமை வகித்தார். தாசில்தார் கோவிந்தராஜ், டி.எஸ்.பி., ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், ஆர்.ஐ., சுகுணா, தீயணைப்புத்துறை அதிகாரி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., மதுராந்தகி பேசியதாவது: நான்கு ரத வீதிகளில் தேரோட்டத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க, ரோட்டில் உள்ள தற்காலிக கடைகள் அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.தேரோட்டம் துவங்கும் சில மணிநேரம் முன்பாக, காரமடை மெயின் வழியாக வாகனங்கள் வருவதை நிறுத்தி, சின்னமத்தம்பாளையத்தில் இருந்து கன்னார்பாளையம், பெள்ளாதி, அன்னுார் நால்ரோடு வழியாக அனைத்து வாகனங்களும் மேட்டுப்பாளையம் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நான்கு நாட்களுக்கு கோவில் அருகே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த வேண்டும். தெப்பக்குளத்தில் தீயணைப்பு வீரர்கள் எப்போது தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர் செல்லும் ரோடுகளையும், குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை விட ஏற்பாடு செய்யப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போலீசார் தக்க பாதுகாப்பு நடவடிக்கையும், திருட்டு, வழிப்பறிகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஆர்.டி.ஓ., மதுராந்தகி பேசினார்.கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் நன்றி கூறினார்.