உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் உள்ளமே கருணை இல்லம்!

கடவுள் உள்ளமே கருணை இல்லம்!

இரண்டு கிராமத்து நண்பர்கள் பேசிக்கொண்டது இது.  என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?  ஐந்து ஏக்கரில் வயல் வாங்கலாம் என்று இருக்கிறேன். வேண்டாம்...வயல் வாங்காதே.  ஏன்?  நான் எருமை மாடு வாங்கலாம் என்று இருக்கிறேன். அது உன் வயலில் மேய்ந்தால் நம்மிடையே மனத்தாங்கல் வந்து விடும். ஆனால், நான் உன் நட்பை இழக்க விரும்பவில்லை. சரி, அப்படியானால் நீ எருமை மாடு வாங்காதே. உனது திட்டத்தை மாற்றிக் கொள். அது இயலாது.. நான் வயல்வெளி வாங்கத் தான் போகிறேன்..  நான் ஏற்கனவே எருமை மாடு வாங்க அச்சாரம் கொடுத்தாச்சு.  எப்படி உன் மாடு என் வயலுக்குள் வரும்? நான் தான் வேலியிட்டு விடுவேனே! அது எருமை தானே. எப்படியும் தள்ளிக் கொண்டு நுழைந்து விடும். அதை தடுக்க முடியாது. சண்டை மூண்டது. ஒருவரை ஒருவர் அடித்து கையை உடைத்துக் கொண்டனர். இருவரும்  பஞ்சாயத்துக்குச் சென்றனர். வாங்காத நிலம், வராத மாடு இவற்றால் சண்டையிட்டுக் கையை உடைத்துக் கொண்டது தான் மிச்சம்.

மனதில் எழும் பயங்களும் அப்படியே. வருங்காலம் இன்னும் வரவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலையால் னம் குழப்பம் அடைகிறது. இதனால் எங்கும் நிறைந்த இறைவனை நம்மால் உணர முடிவதில்லை. நான்.. எனது.. நாளைக்கு என்ன.. அடுத்த ஆண்டு.. 10 ஆண்டுக்குப் பின்.. - இப்படி அடுத்த பிறவி வரை கூட திட்டம் தீட்டுகின்றனர்.  புதுமணத் தம்பதியர், வரும் ஏழு ஜென்மத்திலும் கணவன், மனைவியாக வாழ்வோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த பிறவியிலேயே சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.  நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்குப் பதிலாக, எங்கும் நிறைந்திருக்கும் கடவுளையே நீங்கள் அனுபவிக்க வேண்டும். ஒருவேளை பக்தி இருந்தாலும் கூட, பிரார்த்தனையின் போது மனம் முழுமையாக ஈடுபடுவதில்லை. அப்படி இருந்தால் அது பிரார்த்தனை ஆகாது.  இதை ஒரு கதை மூலம் விளக்குகிறேன். ஒரு துறவியிடம் ஆசி பெற வந்த ஒருவர், நீங்கள் அனைத்தையும் துறந்து விட்டீர்கள். நீங்களே சிறந்த துறவி, என்று பாராட்டினார்.  குருதேவரோ, இல்லை... உலகின் மிகச் சிறந்ததைத் துறந்து இருக்கும் நீங்கள் தான் பெரிய துறவி. எதிலிருந்து எல்லாம் படைக்கப்பட்டதோ, எதிலிருந்து எல்லாம் படைக்கப்பட உள்ளதோ அந்தக் கடவுளின் மீது ஆசை இல்லாமல், அவரையே துறந்த நீங்களே  பெரிய துறவி, என்றார். மற்றதையெல்லாம் மறந்து விட்டு கடவுளை மட்டும் மனதில் வையுங்கள். கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். நிம்மதி பெறுங்கள்.  (மகான் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !