உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை என்பது நம் கையில் இல்லை!

நாளை என்பது நம் கையில் இல்லை!

வெற்றிக்கு வழிகாட்டும் மாபெரும் சக்தி ஒன்று இருக்கிறது. அந்த பேரொளியை நோக்கித் திரும்புங்கள். எல்லா படைப்பையும் உருவாக்கி, வாழ்வு தரும் அறிவுப்பொருளே கடவுள். அதையே ஓம் என்னும் மந்திரமாக வணங்குகிறோம்.எந்த ஒரு சூழ்நிலையிலும் மனச் சமநிலையை இழக்கக் கூடாது. தோல்வி ஏற்பட்டாலும் அதற்கான காரணத்தை ஆராயுங்கள். எத்தனை முறை தோற்றாலும், விடாமுயற்சி கொண்டவனே உண்மையான வெற்றியாளன். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் வேறு யாராகவும் மாற வேண்டாம்.  நீங்களாகவே இருக்க முயலுங்கள். உங்களைப் போல வேறு யாரும் உலகில் இருக்க முடியாது. உங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.தவறான சிந்தனை எழுவது இயல்பே. விவேகத்தால் அதை ஆராயத் தொடங்கினால், தீமை நீங்கி மனதில் நல்லெண்ணம் மலரும். தினமும் இரவில் துõங்கும் முன் உங்கள் குறை நிறைகளை ஆராயுங்கள். அப்போது வளர்ச்சிக்கான கதவு திறப்பதைக் காண்பீர்கள்.மக்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்காததால் வளர்வதும் இல்லை. தேய்வதும் இல்லை. சொல்லப் போனால், வாழ்வில் தேங்கி விடுகின்றனர்.அற்ப விஷயத்தில் ஈடுபடுவதால் நேரம் வீணாவதோடு, கடவுளின் சாம்ராஜ்யத்தையே மறந்து விடுகிறோம். நல்லதைச் செய்ய நினைத்தால் இப்போதே செய்யுங்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம் என உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்.  நாம் தேவனின் கை பொம்மைகளாகவே இருக்கிறோம். நாளை இங்கே இருப்போமா என்றே தெரியாது.  கடவுள் இயக்குநராக இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த கதாபாத்திரத்தில் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். மகான்களின் வாழ்க்கை வரலாறைப் படியுங்கள். சுலபமாக எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.உங்களுக்கு எதிராக நடப்பவர்களிடம் கூட, அன்புடன் நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவரை விட்டு விலகி விடுங்கள்.மனச்சாட்சி தான் சிறந்த நீதிபதி. மனச்சாட்சியின் கைகளில் தங்களை ஒப்படைத்து நடப்பவர்களே நல்ல மனிதர்கள். திருத்திக் கொள்ள வயது தடையாக இருப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் உங்களைச் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.பணியின் காரணமாக கடவுளையோ, கடவுளுக்கான பணியையோ புறக்கணிக்காதீர்கள்.  சொந்தப் புகழை நாடாதீர்கள். கடவுளின் மகிமையைநாடும்  உண்மையான அன்பர்களாக வாழத் தொடங்குங்கள்.கடவுளை மகிழ்விப்பதற்காகவே பணி செய்கிறேன் என்று அடிக்கடி மனதிற்குள் சொல்லுங்கள். மகான் பரமஹம்ச யோகானந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !