உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் முருகன் கோவில்களில் விண்ணைப்பிளந்த "அரோகரா கோஷம்!

சேலம் முருகன் கோவில்களில் விண்ணைப்பிளந்த "அரோகரா கோஷம்!

சேலம்: பங்குனி உத்திரத்தையொட்டி, சேலத்தில், நேற்று, அனைத்து முருகன் கோவில்களிலும், பக்தர்கள், பொதுமக்கள், ஸ்வாமியை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விண்ணைப்பிளக்கும் வகையில், முருகப்பெருமானை நோக்கி, அரோகரா கோஷம் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் உத்திர தினத்தன்று, அனைத்து முருகன் கோவில்களிலும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். தைப்பூசம், வைகாசி விசாகம் போன்று, பங்குனி உத்திரமும், முருகப் பக்தர்களுக்கு முக்கியமான நாளாகும். காலையில் புனித நீராடி, தங்களுடைய வேண்டுதலை, இந்நாளில் நிறைவேற்றி செல்வர். திருச்செந்தூர், பழனி, திருத்தனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமி மலை உள்ளிட்ட ஸ்தலங்களில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சேலத்தில், ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோவிலில், பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின், ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். அதேபோல், ஊத்துமலை முருகன் கோவிலில், மயில் காவடியை சுமந்தபடி, மலையேறி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். குமரகிரி சுப்பிரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திர சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவை தவிர, அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணியசுவாமி கோவில், ஃபேர்லண்ட்ஸ் முருகன் கோவில், சுகவனேஸ்வரர் கோவில் உள்ளிட்டவற்றிலும், பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது. கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில், நவபாஷானத்தால் உருவாக்கப்பட்ட கார்த்திகேயன் சரணாலயத்தில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், மதியம் உச்சிக்கால பூஜையும், மாலையில், திருத்தேர் வலம் வருதலும் நடந்தது. காலை முதல் இரவு வரை, முருகப்பெருமானை நோக்கி, பக்தர்கள், அரோகரா கோஷத்தை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !