தர்மபுரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்
தர்மபுரி: தர்மபுரி, நெசவாளர் ஓம்சக்தி மாரியம்மன், துர்க்கையம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் காலயாகபூஜை, கோபுர கலசம் வைத்தல், தீபாராதனை, மூன்றாம் காலயாகபூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகபூஜை நடந்தது. 10 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. விஸ்வநாத சிவாச்சாரியார், அருணாச்சல கார்த்திக்கேய சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி நகரம், பாப்பாரப்பட்டி, கிருஷ்ணகிரி, கம்பைநல்லூர், சேலம் உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. * தர்மபுரி அடுத்த, அக்கனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட, நடுபட்டி கிருஷ்ணன் கொட்டாயில் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி முதல் கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் காலயாக பூஜை, தீர்த்த குடம் எடுத்தல், இரண்டாம் காலயாகபூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், மணிகண்டன் குருக்கள் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.