செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயில் தேரோட்டம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. பங்குனி உத்திர விழாவையொட்டி கடந்த 25ம் தேதி மாலை விநாயகர் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. 26ம் தேதி காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றமும், இரவு 9 மணிக்கு அலங்கார வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் முருகன் எழுந்தருளி திருவீதியுலா மற்றும் சிறப்பு அபிஷேகங்களும், நாள் தோறும் காலை 10 மணிக்கு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார வழிபாடும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், மாவிலங்கை, தேனுõர், பெரகம்பி, பாடாலூர், இரூர், ஆலத்துõர்கேட், பெரம்பலூர், துறைமங்கலம், களரம்பட்டி, கூத்தனுõர், துறையூர், தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று 4ம் தேதி மாலை திருத்தேர் நிலைக்கு வந்தடைகிறது. 7ம் தேதி அன்று விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் கௌதமன், தக்கார் ஜெயதேவி மற்றும் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.