உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மனுக்கு இன்று திருக்கல்யாணம்!

உடுமலை மாரியம்மனுக்கு இன்று திருக்கல்யாணம்!

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சூலத்தேவருக்கும் அம்மனுக்கும் இன்று, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச், 24ல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 31ம் தேதி இரவு, திருவிழா கம்பம் போடப்பட்டது. ஏப்., 3ம் தேதி திருவிழா கொடியேற்றப்பட்டது. அன்று மதியம் முதல் பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. திருவிழா முன்னிட்டு, நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.  உடுமலை நகர் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து, கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றியும், பூவோடு, மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, வழிபட்டனர்.  நேற்றிரவு, 10:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிறைவு பெற்றது. இன்று அதிகாலை மாவிளக்கு எடுத்தலும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை, ஆராதனையும் நடந்தது. பிற்பகல், 3:00 மணிக்கு, சூலத்தேவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நாளை மாலை, 4:25 மணிக்கு நடக்கிறது.

தேர் தயார்: பொதுப்பணித்துறை சான்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன், நிலையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட திருத்தேர், கோவில் முன் நிறுத்தி வைக்கப்பட்டு, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.  இதையடுத்து அம்மன் பவனி வர, திருத்தேர் அலங்கரிக்கும் பணி கடந்த இருநாட்களாக நடந்தது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தேர் பொதுப்பணித்  துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமராஜ், தேர் சாலையில் ஓடும் வகையில் உள்ளதா என்பதை அறிய தேரின் சக்கரம், அச்சு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இத்துடன், அம்மன் எழுந்தருளும் அலங்கார பீடத்தின், மரசட்டங்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப்பின், தேருக்கு தகுதிச்சான்று அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !