எல்லம்மன் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலம்!
வாலாஜாபாத்: ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று முன் தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 10ம் தேதி துவங்கியது.அன்று முதல், உற்சவர் ஊத்துக்காடு எல்லம்மன், பல்வேறு அலங்காரத்தில், சூரியபிரபை, சந்திரபிரபை, நாகம், பூதம், அன்னம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில், எழுந்தருளி வீதி உலா வந்தார். அமாவாசையான நேற்று முன் தினம், இரவு 8:00 மணி அளவில், மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில், தொட்டில் உற்சவத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு பொங்கலிட்டும்; வேப்பிலை ஆடை அணிந்தும், நேர்த்தி கடன் செலுத்தி வணங்கி சென்றனர். இந்த விழாவை முன்னிட்டு, அரசு பேக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.