திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, தீமிதி திருவிழா
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, திருவிளக்கு பூஜை நடந்தது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்து வருகிறது. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும்; இரவு, 10:30 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில், உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், 108 பெண்கள், திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து, திருத்தணி சந்து தெரு நாடக கலைஞர்களால் பகடை துாயில் நாடகம் நடை பெற்றது. நாளை, அர்ச்சுனன் தபசும்; 9ம் தேதி இரவு, கர்ண மோட்சம் நாடகமும்; 10ம் தேதி காலை, 8:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும்; மாலை, 6:00 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடை பெறுகிறது. கனகம்மாசத்திரம்: இரண்டு திரவுபதியம்மன் கோவில்களில், நேற்று, தீமிதி திருவிழா நடந்தது.
திருவாலங்காடு ஒன்றியம், மாவூர் மற்றும் தோமூர் ஆகிய பகுதிகளில் உள்ள திரவுபதி அம்மன் கோவில்களில், கடந்த மாதம் 16ம் தேதி, தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை மற்றும் மாலை என, இரு நேரங்களில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு 10:00 மணிக்கு நாடகமும் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி: திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், 10ம் ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும், நேற்று முன்தினம் முதல், வரும் 17ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பும், மாலையில் சிறப்பு தீபாராதனை, மதியம் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும் நடக்கிறது. 5ம் தேதி முதல், 17ம் தேதி வரை, இரவு 10:00 மணிக்கு, மகாபாரத நாடகம் நடைபெறுகிறது. வரும் 6ம் தேதி, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 8ம் தேதி அர்ச்சுனன் தபசு, 17ம் தேதி காலை, 8:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடக்கிறது. 18ம் தேதி காலை, தருமர் பட்டாபிஷேகத்துடன், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா நிறைவு பெறுகிறது.