கடத்தல் கும்பலால் ஆண்டவன் சிலைகள் அம்போ!
தமிழகத்தில், பழங்கால கோவில் சிலைகளை பாதுகாப்பதில், அறநிலைய துறை மெத்தனமாக செயல்படுவதால், சர்வதேச சிலை கடத்தல் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது’ என, போலீசார் தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல் சம்பவங்கள் குறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 4.5 லட்சம் பஞ்சலோக சிலைகள் உள்ளன. வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் இந்த சிலைகள், போதிய பாதுகாப்பு இன்றி உள்ளன. கடந்த, இரு வாரத்தில் மட்டும், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 90 கோடி ரூபாய் மதிப்புள்ள, 13 பஞ்சலோக சிலைகளை மீட்டுள்ளனர்.
வரலாற்று சிறப்பு: சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் கபூரின் கைதுக்கு பின், சிலை கடத்தல் சம்பவங்கள் குறைந்துவிடும் என, போலீஸ் தரப்பில் நம்பப்பட்டது. ஆனால், அதன்பின்னரே, கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. தற்போது சர்வதேச சந்தையில், சோழர் கால சிலைகளுக்கு, ’கிராக்கி’ அதிகம் என்பதால், அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் குறிவைத்து கடத்துகின்றனர். தமிழகத்தில் உள்ள, வரலாற்று சிறப்புமிக்க சிலைகள் பற்றிய விவரங்களை, சர்வதேச சிலை கடத்தல்காரர்கள் விரல் நுனியில் வைத்து உள்ளனர்.தமிழகத்தில் செயல்படும், அவர்களின் முகவர்கள், சில லட்சம் ரூபாய்க்காக, வரலாற்று பொக்கிஷமான சிலைகளை, வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். சிலை கடத்தல் தொடர்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ’போலி வழக்கறிஞர்களும், முன்னாள் ராணுவ வீரர்களும், சினிமாவில் இருப்போரும், சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்’ என, தெரிவித்துள்ளனர். கோவில்களில் இருந்து திருடிய சிலைகளை, கலை பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனையகத்தில் சந்தைப்படுத்துகின்றனர்.
அதிநவீன கேமரா: கடத்தல்காரர்கள் வாடிக்கையாளர் போல் வந்து, சிலைகளில் ஏதாவது கீறல், விழுத்து உள்ளதா என்பதை ஆராய்ந்து வாங்கி செல்கின்றனர். இதுவே, தற்போதைய நடைமுறை. தமிழகத்தில் சிலை திருட்டை முற்றிலும் தடுக்க முடியும். அதற்கு அறநிலைய துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சிலைகளை ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை, நிறுவிய மன்னர் யார் என்ற வரலாற்று தகவல்களை பொறித்து வைக்க வேண்டும்.அத்துடன், கோவில்களில், கும்மிருட்டிலும் படம் பிடிக்கும் திறன் கொண்ட அதிநவீன கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும். சில கோவில்களில கதவு உள்ளது; பூட்டு இல்லை. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.