பூட்டை மாரியம்மன் கோவிலில் 31ம் தேதி தேர்த்திருவிழா துவக்கம்
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் தேர் திருவிழா வரும் 31ம் தேதி துவங்குகிறது.சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் வரும் 31ம் தேதி ஆடி மாத தேர் திருவிழா துவங்குகிறது. பிரசித்தி பெற்ற இத்திருவிழாவில், சங்கராபுரம் சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் கல்வராயன்மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு செய்வது வழக்கம்.இந்தாண்டு தேர்திருவிழா வரும் 31ம் தேதி துவங்குகிறது. அன்று காலை அம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடக்கிறது. இரவு அம்மன் முத்துபல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (1ம் தேதி) மாலை அம்மன் தேர் ஏறும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பாலப்பட்டு ஜாகீர் முத்துசாமி தேர் வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். அமைச்சர் மோகன், காமராஜ் எம்.பி., அறநிலையதுறை இணை ஆணையர் வாசுநாதன், சங்கராபுரம் சேர்மன் அரசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.அன்று இரவு, சங்கராபுரம் ரோட்டரி சார்பில் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் குழுவினரின் பாட்டிசை பட்டிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை பூட்டை ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, செம்பராம்பட்டு தலைவர் ரேணுகா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.