விளக்கு ஏற்றும்போது ஒன்று அல்லது ஐந்து முகங்கள் என்று நியமமுண்டா?
தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வைத்தல் என்பது, நமது துன்பங்களுக்குக் காரணமான பாபங்களைப் போக்கடிக்கும் சுலபமான பரிகாரமாகும். குறிப்பாக, தெய்வங்கள் இருக்கும் கோயில்களிலும், தெய்வ சம்பந்தமாகவே வாழும் பெரியோர்கள் வசிக்கும் வீட்டிலும், மக்கள் நடமாடும் நான்கு சந்திப்புக்கள் கூடும் வீதிகளிலும், நிரந்தரமாக (எலக்ட்ரிக்) தீபம் எரியுமாறு செய்வதால், அந்தக் குடும்பத்தில் வசிப்பவர்களின் புத்தி (ஞாபக) சக்தி அதிகரிக்கும். நல்ல சிந்தனை உருவாகும். கண்களில் ஏற்படும் பார்வைக்குறைவு, கட்டி போன்ற கண் சம்பந்தமான நோய்களும் விலகும் என்கிறார் ஸம்வர்த்தர் என்னும் மஹரிஷி.
கோயில்களிலோ அல்லது வீட்டிலோ தெய்வ சன்னிதியில் எண்ணெய் அல்லது நெய்யால் தீபம் ஏற்றும்போது. எத்தனை முகம் இருக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் இல்லை. ஒன்று முதல் எத்தனை முகங்கள் வரை வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால், ஒருமுகம், இரண்டு முகம் தீபங்கள் ஏற்றும்போது, தெற்கு மற்றும் மேற்கு திசையை விலக்கி, கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி தீபம் எரியுமாறு ஏற்ற வேண்டும். மூன்று முகங்களுடன் தீபத்தை ஏற்றும்போது, தெற்கு திசையை விலக்கி, கிழக்கு மேற்கு வடக்கு திசையை நோக்கி திரிகள் எரியுமாறு தீபங்களை ஏற்றி வைக்கலாம். நான்கு முக, ஐந்து முக, தீபங்கள் ஏற்றும்போது திசைகளில் நியமமில்லை.