உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் வடம் பிடிக்க.. ஆடி அசைந்த வந்த அழகர்கோவில் தேர்!

பக்தர்கள் வடம் பிடிக்க.. ஆடி அசைந்த வந்த அழகர்கோவில் தேர்!

அழகர்கோவில்,: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 23ல் துவங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் கோயிலை வலம் வந்தார். முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் புறப்பட்ட பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு ஆராதனைகள் நடந்தன. காலை 7.10 மணிக்கு தேருக்கு தீபாராதனை நடந்தது. நாட்டார்கள் வெண் கொடி வீச பக்தர்கள் கோவிந்தா கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடி, அசைந்து வலம் வந்த புதிய தேர் காலை 10.20 மணிக்கு நிலைக்கு வந்தது.ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தன காப்பு செலுத்துவதற்காக நடை பயணமாக கோயிலுக்கு வந்தனர். இரவு முதல் காலை வரை சுவாமிக்கு சந்தன காப்பு நடந்தது. ஆடி அமாவாசை அன்றும் 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தனக் காப்பும், அன்று இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். அரசு உத்தரவு காரணமாக தற்காலிக கடைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !