ஆடிமாத திருவிழாவில் டிரம்ஸ், செண்டை மேள ஆதிக்கம்!
விருத்தாசலம்:மாரியம்மன் கோவில் ஆடி மாதத் திருவிழாக்களில் டிரம்ஸ், செண்டைமேலங்கள் ஆதிக்கத்தால்; மெய்சிலிர்க்கும் பம்பை, உடுக்கை, சிலம்பு ஓசைகள் ஓய்ந்தன.ஆடி மாதம் அம்மன் மாதமாகும். இம்மாதத்தில் குக்கிராமங்கள் முதல் மாநகர அம்மன் கோவில்களில் குழந்தைகள், பெண்கள் மட்டுல்லாத ஆண்களும் பால்குடம், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்திக்கொண்டு ஊர்வலம் சென்றும்; செடல் குத்தியும், தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.அம்மன் கோவில்களிலும், மக்கள் வீடுகளிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பம்பை, உடுக்கை, சிலம்பு ஓசைகளுடன் வர்ணனைகள் கேட்பவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி மெய்சிலிர்க்க வைக்கும். ""காசியிலும் வீசம் பெரிதாம் விருத்தகாசி எனப்படும் விருத்தாசலம் மணிமுக்தாற்றிலிருந்து விருத்தாசலம், முதனை, அரசக்குழி, குப்பநத்தம், விருத்தகிரிகுப்பம், காணாதுகண்டான், எறுமனூர், மணவாளநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஆடிமாத அம்மன் திருவிழாவிற்காக பூங்கரகம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி, அலகு குத்திக்கொண்டு, மணிமுக்தாற்றில் புனித நீர் எடுத்துக்கொண்டு பம்பை, உடுக்கை, சிலம்ப ஒளியுடன் அம்மனை வர்ணித்து ஊர்வலமாக செல்வர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக, கேரளா பணக்காரர்களின் திருமணம், அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், கோவில் விழாக்களில் ஆதிக்கம் செலுத்திய செண்டை மேளம் தமிழக அம்மன் கோவில்களில் ஆடிமாத திருவிழாக்களில் ஆதிக்கம் அதிகரித்துள்ளன. இதனுடன் டிரம்ஸ் மேளமும் போட்டியிடுவதால் மக்களிடத்தில் முன்பைவிட கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு உணர்வும் அதிகரித்துள்ளபோதிலும்; பழமையான பம்பை, உடுக்கை, சிலம்பங்களுக்கு விடை கொடுத்துள்ளனர். இதனால், ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில் திருவிழாக்கள், ஊர்வலங்களில் டிரம்ஸ், செண்டை மேலங்கள் ஆர்ப்பரிக்கின்றன. இதனால், அம்மன் விழாக்களில் பம்பை, உடுக்கை, சிலம்பு ஓசைகளிலிருந்த மெய்சிலிப்பை உணரமுடியாமல் போனது.