சேரர் வில் பொறித்த சங்க கால நாணயம் கண்டுபிடிப்பு!
சென்னை:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர், அதிராம்பட்டினம் அருகில் உள்ள கடற்கரை ஊர்களான, மந்திரிப்பட்டினம், செந்தலைப்பட்டினம் ஆகிய இடங்களில், அகழாய்வுகளை மேற்கொண்டுள்ளது. இத்துறையின் புலத்தலைவர் பேராசிரியர் சு.ராசவேலு தலைமையில், பேராசிரியர்கள் அதியமான், செல்வகுமார் அவர்களின் கீழ், அகழாய்வுகள் நடந்து வருகின்றன. நாணயவியல் சங்கம்:இதுகுறித்து, பேராசிரியர் ராசவேலு கூறியதாவது:கடந்த, 15ஆண்டுகளுக்கு முன், மந்திரப்பட்டினம் பகுதி யில், இறால் பண்ணைகள் அமைக்கத் தோண்டியபோது, சங்க கால முத்திரை நாணயம், ரோமானிய நாணயங்கள், பிற்கால சோழர் நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, இதை தென்னிந்திய நாணயவியல் சங்கம் வெளியிடும் கருத்தரங்க ஆய்விதழில், முனைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டார். இதன் அடிப்படையில், தற்போது இப்பகுதியில் உள்ள இடங்களை, கள ஆய்வுகள் செய்து, புதிதாக மண்மேடுகளை கண்டுபிடித்து, முறையான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள மண்மேடு, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது, மந்திரிப்பட்டினத்திற்கும், செந்தலைப்பட்டினத் திற்கும் இடையில், கடலில் இருந்து, 0.5 கி.மீ., தொலைவில் உள்ளது. அங்கு இதுவரை, மூன்று அகழாய்வு குழிகள் இடப்பட்டு உள்ளன. இக்குழிகளில் இருந்து, ௧௦க்கும் மேற்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள், எட்டு நாணயங்கள், ராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட, சிலோன் மேன் காசுகள் எனப்படும் ஈழக் காசுகள். இவை, செப்புக் காசுகளாகும். இக்காசுகள் கிடைத்த மண்ணடுக்குகளுக்கு கீழ்பகுதி யில், தற்போது சேரர் இலச்சினையான, வில் பொறித்த, சதுர வடிவிலான ஈயக் காசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம், கி.மு., 2ம் நுாற்றாண்டாகும். எனவே, மந்திரிப்பட்டினம் - செந்தலைப்பட்டினம் பகுதிகள், சங்க காலம் முதல், துறைமுக வணிக நகரமாக இருந்துள்ளமையை அறிய முடிகிறது. இக்காசுகளை தவிர, வீட்டின் ஒரு பகுதியில் நீரை சேமிக்கும், ௩ அடி உயரமுடைய பெரிய பானையும், அதன் வடக்கில் மற்றொரு குழியில், ௬ அடி நீளத்தில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்று அமைப்பில், ௧௨ சுடுமண் குழாய்களை இணைத்து, நீர்க்கால்வாய் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. எனவே, இந்தப் பகுதியில், கடற்கரையை ஒட்டி, ஊர் ஒன்று இருந்து மறைந்துள்ளதை அறிய முடிகிறது. இங்குள்ள மக்கள், இவ்வூரின் பெயர், பந்தர்பட்டினம் என்று இருந்து, மருவி
தற்போது, மந்திரிப்பட்டினம் என, வழங்கப்படுகிறது எனக் கூறுகின்றனர். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில், கொடுமனம் பட்ட வினைமான் நருங்கலம் பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் என்ற வரியை நினைவுபடுத்துவதாக, இவ்வூர் அமைந்துள்ளது. பல்வகை அருமணிகள், இத்துறைமுக நகரம் ஏற்றுமதி செய்துள்ளதை, சங்க இலக்கியம் சுட்டுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட நுண்ணிய அருமணிகளும், பல்வேறு வண்ண மணிகளும், இந்த அகழாய்வில் கிடைத்துஉள்ளன. சங்ககால சேரர்கள், சதுர வடிவத்தில், வில் பொறித்த நாணயங்களை, செம்பிலும், ஈயத்திலும் வெளியிட்டுள்ளனர். இவ்வகை காசுகளை, தினமலர் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார். இவை, பெரும்பாலும் சேரர்களின் தலைநகரமான, கரூரில் கண்டுபிடிக்கப்பட்டவை. தற்போது, கடற்கரை பகுதியை ஒட்டிய பகுதியில், ஈயத்தில் சங்க கால சேரர்களின் காசு கிடைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மேலை கடற்கரை மட்டுமின்றி, கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும், அயலக வணிகத்தை மேற்கொண்டுள்ளதை, இக்காசு உறுதி செய்கிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து அகழாய்வு கள் செய்ய இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். ஏற்கனவே, ரோமானிய காசுகள் இப்பகுதியில் கிடைத்திருப்பதால், மேலும் சங்க கால
ரோமானிய நாணயங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, பேராசிரியர் அதியமான் கருத்து தெரிவித்தார். அகழாய்வு:பேராசிரியர் செல்வகுமாருடன் இணைந்து, இப்பகுதியில் மேலும் மறைந்து விட்ட கடற்கரை மண்மேடுகளை, பேராசிரியர் ராசவேலு கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கும் அகழாய்வுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர், முனைவர் கணேஷ்ராம், அகழாய்வு பகுதிகளை பார்வையிட்டு, பல்கலைக்கழக நிர்வாகம் அகழாய்வுகளை மேலும் தொடர, அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார். இந்த அகழாய்வில் மேற்குறிப்பிட்ட பேராசிரியர்களுடன், பல்கலைக் கழக மாணவர்களும், பூண்டி புஷ்பம் கல்லுாரி, மயிலாடுதுறை ஏ.வி.சி., கல்லுாரி, புதுக்கோட்டை அரசு ஆடவர் கல்லுாரி வரலாற்றுத் துறை மாணவர்களும் பங்கு பெற்றுள்ளனர். மேலும், அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.