மழை வளம் வேண்டி வேத பாராயணம் துவங்குகிறது!
சென்னை: அனைவருக்கும் நல்ல உடல் நலமும், உலகில் நல்ல மழை வளமும் கிடைக்க வேண்டி, அடுத்த மாதம், வேத பாராயணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதுகுறித்து, முசிறி சுப்பராம சாஸ்திரி சாரிடபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புனிதமான வேத நெறிகளை காக்கவும், அவற்றை வளர்க்கவும், தேவையான நடவடிக்கைகளை, முசிறி சுப்பராம சாஸ்திரி சாரிடபிள் டிரஸ்ட் செய்து வருகிறது.செப்., 16ம் தேதி முதல் முக்கியமாக, வேத சுருதியை, அனைவரும் கேட்டு, உடல் நலம் பெறவும், உரிய பருவ காலத்தில் மழை வளம் பெற்று, புவியில் செல்வம் கொழிக்கவும், வேதபாராயண நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. வேத உபநிஷத்துகள், இதிகாச புராணங்கள், சமஸ்கிருதம், வேத பாராயணங்களை போற்றி வளர்த்தல்; வேதங்களை நடத்தும் ஆசிரியர்கள், பள்ளிகள், மாணவர்களுக்கு நிதி உதவி அளித்தல்; வேதங்களில் சிறந்து விளங்கும் சான்றோர்களுக்கு பாராட்டு, பரிசு வழங்குதல் உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறது. குறிப்பாக, கிருஷ்ண யஜூர் வேத கனபாராயணம் எட்டு வித்வான்களால் நடத்தப்படும். அதனை தொடர்ந்து, உத்சவம், வரும் செப். 16ம் தேதி கலை துவங்கி, 26ம் தேதி இரவு வரை நடைபெறும். வரும், செப். 16ம் தேதி காலை, த்வஜாரோகண புறப்பாடும், இரவு அன்னவாகன புறப்பாடும் நடைபெறும். செப்., 17ம் தேதி இரவு, சிம்ம வாகன புறப்பாடு நடைபெறும்.
பொருளுதவிக்கு...: செப்., 18ம் தேதி இரவு, அனுமந்த வாகனத்திலும், செப்., 19ம் தேதி இரவு, கருட வாகனத்திலும், உத்சவம் நடைபெறும். 20ம் தேதி, இரவு, சேஷ வாகனம், 21ம் தேதி இரவு, கஜ வாகனம் ஆகியவற்றில் புறப்பாடு நடைபெறும். செப்., 22ம் தேதி மாலை திருக்கல்யாணம் நடைபெறும். 23 இரவு, 24 காலை, 25, 26 இரவு, ஆகிய நேரங்களில், முறையே, குதிரை, தேர் வாகன புறப்பாட்டை தொடர்ந்து, தீர்த்தவாரி, சப்தாவரணம், ஆடும் பள்ளக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புனிதமான பணிக்கு தேவையான பொருளுதவியை, முசிறி சுப்பராம சாஸ்திரி சாரிடபிள் டிரஸ்ட் என்ற முகவரிக்கு, காசோலையாகவோ அல்லது டி.டி.,யாகவோ, நன்கொடையாளர்கள் அனுப்பலாம். பொருட்களாக கொடுப்போர், குணசீலம் ஸ்ரீவாசவி மகால் கல்யாண மண்டபத்தில் உள்ள, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஓப்படைக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.