உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலிகை ஓவியங்கள் புதுப்பிப்பு!

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலிகை ஓவியங்கள் புதுப்பிப்பு!

சென்னை: காஞ்சிபுரம், வரத ராஜ பெருமாள் கோவில் மூலவர் சன்னிதியின் வெளிப் பிரகாரத்தில் உள்ள, பழமையான மூலிகை ஓவியங்கள், 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட உள்ளன. தொல்லியல் துறையினர், வரும், 10ம் தேதி, இப்பணியை துவங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில், செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கி.பி., 848-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு, மூலவர் சன்னிதி யின் சுற்றுச்சுவரில், பல்வேறு மூலிகைகளைக் கொண்டு, வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன.இந்த ஓவியங்கள், பெருமாளின் தசாவதாரங்கள், பள்ளி கொண்ட பெருமாள், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை போன்றவற்றை விளக்குவதாக உள்ளன. அவை, 500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகின்றன. அவற்றை புதுப்பிக்க, அறநிலையத் துறை, கடந்த ஜூன் மாதம், 68 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி, தொல்லியல் துறையிடம் பணியை ஒப்படைத்தது. இதற்காக, கடந்த, 2-ம் தேதி பூஜை நடைபெற்றது. தொல்லியல் துறையினர், வரும், 10-ம் தேதி, இப்பணியை துவங்க உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !