சோனை கருப்பணசுவாமிக்கு 1500 மதுபாட்டில்கள் நேர்த்திகடன்!
சின்னமனுார்: தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சோனை கருப்பணசுவாமி பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் வழங்கிய 1500 மதுபாட்டில்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டன. குச்சனுாரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. ஆடி சனிவாரத்திருவிழா நடக்கிறது. இதன் உபகோயிலான சோனை கருப்பணசுவாமி சன்னதியில் பொங்கல் விழா நேற்று நடந்தது. நேர்த்திகடனாக பக்தர்கள் 1500 மதுபாட்டில்கள், 27 ஆட்டு கிடாக்கள் காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் வழங்கிய மதுபாட்டில்களை சன்னதிக்குள் அர்ச்சகர் ரகுராம் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். சுவாமியின் காலடியில் உள்ள மண் களையத்தில் மதுபாட்டில்களில் இருந்த மதுவை ஊற்றினார். பக்தர்கள் வழங்கிய ஆட்டு கிடா, கோழிகளை சமைத்து, அறநிலையத்துறை சார்பில் கிராம மக்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. அர்ச்சகர் சிவக்குமார் கூறியதாவது:திருமண தடை, குடும்ப பிரச்னைகள் நீங்க சோனைகருப்பணசுவாமியை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறும் போது ஆட்டு கிடா, கோழி, மது பாட்டில்கள் வழங்குவர். ஆடி நான்காவது சனிவார திருவிழா முடிந்த பின் வரும் திங்களன்று பக்தர்கள் வழங்கிய மதுபாட்டில்கள் சுவாமிக்கு படைக்கப்படும். சன்னதிக்குள் உள்ள மண்களையத்தில் எவ்வளவு மது ஊற்றினாலும் பூமிக்குள் சென்று விடும். இந்த நேரத்தில் சுவாமியின் கண்கள் சிவந்து இருக்கும். மதுவின் வாடை துளி கூட இருக்காது, என்றார்.