காஞ்சி வரதர் கோவிலில் பொலிவு பெறும் ஓவியங்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள, பழைய சுவர் ஓவியங்கள், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி, நேற்று துவங்கியது. வரதராஜ பெருமாள் கோவில் கர்ப்பக்கிரக வெளிச்சுவரிலும், வெளிபுற சுவர் மற்றும் தொண்டரடிப்பொடி நுழைவாயில் இரு புறங்களிலும், பல வகையான ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள், 450 ஆண்டுகளுக்கு முன், விஜயநகர மன்னர்கள் காலத்தில் வரையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவற்றை, வேதிப்பொருட்கள் மூலம் பழமை மாறாமல் புதுப்பிக்க, ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர் மூலம், நேற்று பணி துவங்கியது. இதற்காக, கடந்த ஏப்ரல் மாதம், 65.10 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கியது.இதுகுறித்து, தொல்லியல் துறை முன்னாள் அலுவலர் சம்பத் கூறியதாவது:நாங்கள், அழிந்த ஓவியத்தை வரையவில்லை. பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை செய்கிறோம். புதுப்பித்த பின், பாதுகாப்பிற்காக, அழுக்கு படியாமல் இருக்க, வேதிப்பொருள் ஒன்றை பூசி விடுவோம். இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த பணி முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.